×

குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கருகிய நெற்பயிர், பத்திரத்துடன் மனு அளிக்க வந்த பெண்

ராமநாதபுரம், பிப்.20: ஆர்.எஸ்.மங்கலம் அருகே விவசாய மோட்டார் திருடு போய் விட்டதால்,தண்ணீரின்றி கருகிய நெல், நிலப் பத்திரத்துடன் பெண் புகார் அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் செங்குடி அருகே வரவணி கிராமத்தை சேர்ந்த சகாயமாதா என்ற பெண், கருகிய நெல் கதிர், நிலப்பத்திரங்களுடன் மனு அளிக்க வந்தார்.

இது குறித்து சகாயமாதா கூறும்போது, ‘வரவணி கிராம பகுதியில் எனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மோட்டார் இருந்தது. இந்த மோட்டரை பயன்படுத்தி மழை இல்லாத நேரங்களில் 2 ஏக்கர் விவசாய நிலத்தில் உள்ள நெல் பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச பயன்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் மோட்டார் காணாமல் போய் விட்டது. இது குறித்து ஆர்.எஸ்.மங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன்.

ஆனால் கண்டு பிடித்து தரவில்லை. தொடர்ந்து திருவாடானை டி.எஸ்.பி அலுவலகம், ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் முதல் ஆர்.டி.ஓ வரை புகார் மனு அளித்து விட்டேன். ஆனால் மோட்டாரை கண்டுபித்து தரவில்லை. இதனால் அறுவடைக்கு தயாரான நிலையிலிருந்த நெல் பயிர்கள் கதிர்விட்ட நிலையில், போதிய தண்ணீரின்றி கருகி, பயிர்கள் நாசமாகி விட்டது. இதனால் நஷ்டம் ஏற்பட்டு விட்டது.

மோட்டார் இன்றி விவசாயம் செய்ய முடியாது என்பதால், இந்த விவசாய நிலத்தினை ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்திற்கு கிரயம் போட்டு தருகிறேன். அதனை அவர்கள் வைத்துக் கொள்ளட்டும்’ என உணர்ச்சி பூர்வமாக தெரிவித்தார். இதனால் கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கருகிய நெற்பயிர், பத்திரத்துடன் மனு அளிக்க வந்த பெண் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,RS Mangalam ,Grievance Redressal Day ,Ramanathapuram Collector ,
× RELATED பாஜ பிரமுகர் மீது நிலமோசடி புகார்...